தமிழக அரசு மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களோடு பேச்சுவார்த்தைக்கு முயற்சித்து அதுவும் தோல்வியில் முடிந்திருக்கிறது.
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள், தலைமை மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள் அனைவரும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனாலும் அரசு கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு, பிறகு அதை கிடப்பில் போட்டு விடுவதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முன்னரே அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து 4 மருத்துவர்கள் சங்கத்தினர் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் டெங்கு சிகிச்சை பிரிவு, அவசர பிரிவு தவிர மற்ற அனைத்து பிரிவுகளுக்கு மருத்துவ சேவை தடைபட்டது. வெளிநோயாளிகள் பலர் மருத்துவ வசதி கிடைக்காமல் இன்னலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
இந்நிலையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அழைத்து தமிழக சுகாதாரத் துறை செயலர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இரு தரப்புக்குமிடையே முடிவுகள் எட்டப்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது. எனினும் கூடிய விரைவில் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.