கொரோனா நடவடிக்கைகளால் வெளிநாடுகளில் தொழில் செய்யமுடியாமல் வெளியேறும் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க முதல்வர் குழு அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பலி கொண்டுள்ளது ஒருபக்கம் இருக்க, மறுபுறம் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டுவித்துள்ளது கொரோனா. இதனால் பல நாடுகளில் நிறுவனங்கள் நசிவடைய தொடங்கியுள்ளன.
பல்வேறு உலகளாவிய நிறுவனங்கள் பல நாடுகளில் முதலீடு செய்து தொழில் செய்து வரும் நிலையில், கொரோனா தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பலவற்றில் பெரும் நஷ்டத்தை சந்தித்ததை தொடர்ந்து பல நிறுவனங்கள் பின்வாங்க தொடங்கியிருக்கின்றன. அப்படியாக பின்வாங்கும் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் செய்ய ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகமுமே பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் புதிய நிறுவனங்களை ஈர்ப்பது பொருளாதார ரீதியாக தமிழகம் சரிவை சந்திக்காமல் இருக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.