இனி நான் ரஜினி குறித்து எந்த தொலைக்காட்சிக்கும், ஊடகத்துக்கும் பேட்டி கொடுக்கப் போவதில்லை என மணியன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்ட் மாதம் பொதுக் கூட்டம் நடத்துவார் என்றும், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
மேலும், பாமக இவருடன் கூட்டணி வைக்கும் என்றும், பாஜகவுடன் கூட்டணி வேண்டுமா?வேண்டாமா என்பது குறித்து ரஜினிதான் அறிவிப்பார். ஆனால், அமமுகவுடன் கூட்டணி வைக்க ரஜினி விரும்பவில்லை என்றும் தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார். தமிழருவி மணியனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவரின் இந்த கருத்துக்கு பல தரப்பு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் தமிழருவி மணியன். அவர் கூறியதாவது, என்னிடம் ஊடகங்களாகவே கேள்வி கேட்கிறார்கள். நான் இருக்கலாம், வாய்ப்பிருக்கிறது, நடக்கலாம் என்று சொல்வதை வைத்து அவர்களாகவே செய்திகளை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள்.
எனவே இனி நான் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் வரையில் நான் எந்தத் தொலைக்காட்சிக்கும், ஊடகத்துக்கும் பேட்டி கொடுக்கப் போவதில்லை. நான் ரஜினிகாந்தின் செய்தித் தொடர்பாளரும் இல்லை. அவரது கட்சிக்காரனும் இல்லை என எதிர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.