தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்றும் நாளையும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆம், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்கள் தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னர் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அப்பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.