தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் இரண்டு விஷயங்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதனை அடுத்து, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவுக்கு நன்றி கூறிய முதல்வர் ஸ்டாலின், இருமொழி கொள்கை குறித்து அமித்ஷாவிடம் பேசியதற்காகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், அடுத்த முறை டெல்லி செல்லும்போது, வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெறுமாறு வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே நேரத்தில், இந்த தீர்மானத்தை கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.