வனப்பகுதியில் சிறப்பு படையினர் ஆமையைக் கொன்று சமைப்பதாக சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ 4 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ என்றும், தமிழ்நாட்டில் நடந்தது அல்ல எனவும் வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மங்களப்பட்டி வனப்பகுதியில் ஆமையை கொன்று சமைப்பதாக உள்ள வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளில் வரும் நபர்கள் சிறப்பு இலக்கு படையை சேர்ந்தவர்கள் என சந்தேகிப்பதாக டிசம்பர் 17ஆம் தேதி சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவின.
மேலும் சில நாளிதழ்களிலும் இது குறித்த செய்திகள் வெளியாகின. இது குறித்து விசாரணை செய்ததில் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிறப்பு இலக்கு படையை சேர்ந்தவர்களோ அல்லது தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்தவர்களோ இல்லை என்பதும் அந்த சம்பவம் தமிழ்நாட்டிலேயே நடைபெறவில்லை என்பதும் தெரிய வந்தது.
மேற்கண்ட சம்பவம் நான்கு வருடங்களுக்கு முன்னதாக வேறொரு மாநிலத்தில் நடந்துள்ளதாக தெரிகிறது. அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிறப்பு இலக்கு படையை சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்பதாக கூறப்பட்ட செய்தி தவறான செய்தியாகும் என்று விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.