ஈழத் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்திட பொது வாக்கெடுப்பு நடத்துவதே தீர்வாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது கறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்ட ஈழத்தமிழர்களின் சோக வரலாறு இன்னும் எத்தனை ஆண்டு காலம் தொடருமோ! என்று உலகத் தமிழினம் பெரும் துயரம் அடைந்திருக்கிறது.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிர்ப் பலி ஆயினர். சிங்கள கொலை வெறிக் கூட்டம் லட்சக் கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த போது நவீன உலகம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அவலமும் நிகழ்ந்தது.
இதற்குப் பிறகும், ஈழத் தமிழர்களை நிரந்தரக் கொத்தடிமைகளாக ஆக்குவோம் என்று சிங்கள இனவாத அரசு கொக்கரிக்கிறது.
இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, பிப்ரவரி 2 ஆம் தேதி, இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போது, புதிதாக உருவாக்கப்படும் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில், சமஷ்டி அமைப்பு முறைக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இனப்படு கொலை செய்திட காங்கிரஸ் கூட்டணி அரசு துணைபோனது. தற்போது, ஈழத் தமிழர்களை நிரந்தரமாக கொத்தடிமைகளாக்கும் சிங்களப் பேரினவாததிற்கு பாஜக அரசு வெண்சாமரம் வீசுகிறது.
இலங்கையில் சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஈழத்தமிழர்களை அழிப்பதில் கைகோர்த்துக் கொண்டதைப்போல, இந்தியாவில் காங்கிரஸ் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் தமிழர்களுக்கு துரோகம் இழைப்பதில் ஒற்றுமையாகச் செயல்படுகின்றன.
இந்திய அரசு கொடுத்த துணிச்சலால்தான், இலங்கை அதிபர் புதிய அரசியல் சட்டத்தில் சமஷ்டி முறை கிடையாது என்று திமிரோடு அறிவித்துள்ளார். இந்தப் புதிய அரசியல் சட்டம் தமிழர்களை வேரறுக்கும் கொலைவாள் என்பதை உலகத்தமிழர்கள் உணர வேண்டும்.
இலங்கை தமிழினப் படுகொலைக்கு பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்ட விசாரணையால்தான் நீதி கிடைக்கும் என்று பத்து நாட்களுக்கு முன்னர் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களை சட்டபூர்வ அடிமைகளாக்கும் திட்டத்தை ஐ.நா. மன்றமும், ஜனநாயக சமத்துவத்தை வலியுறுத்தும நாடுகளும் வேடிக்கை பார்ப்பது தமிழர்களுக்கு இழைக்கப்படும் மன்னிக்க முடியாத இன்னொரு அநீதியாகும்.
ஈழத் தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள அரசியல் சுயநிர்ணய உரிமையை வழங்கிட, தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றுதான் ஒரே தீர்வாகும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.