Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம்! தமிழ்நாடு தின வாழ்த்து செய்தியில் சத்குரு பெருமிதம்!

Advertiesment
பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம்! தமிழ்நாடு தின வாழ்த்து செய்தியில் சத்குரு பெருமிதம்!

Prasanth Karthick

, வியாழன், 18 ஜூலை 2024 (17:39 IST)

தமிழ்நாடு முழுவதும் இன்று (18-07-2024) தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், பக்தியில் ஊறி வளர்ந்தது தமிழ் கலாச்சாரம், இதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி மாநிலம் முழுவதும் இன்று தமிழ்நாடு தினக் கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் கலாச்சாரம் குறித்து சத்குரு அவர்கள் பேசிய விடியோ ஒன்றை அவரின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர் கூறியுள்ளதாவது "இந்த தமிழ் மண், தமிழ் கலாச்சாரம், தமிழ் இசை, தமிழ் நாட்டியம், தமிழ் கலை, தமிழ் மொழி என்று எதை எடுத்தாலும், தமிழ் என்றால், பக்தி என்கிற ஒரு தெம்பு. பக்தியில்லாமல் தமிழ் கலாச்சாரம் இல்லை. பக்தர்களின் நாடாக இருக்கின்ற தமிழ்நாட்டில், குழந்தை பிறந்தாலும் பக்தி, காது குத்து என்றாலும் பக்தி, வாழ்ந்தாலும் பக்தி, திருமணம் செய்தாலும் பக்தி, இறந்தாலும் பக்தி என்றே இருந்து வருகிறது. 

 

பக்தியிலேயே ஊறி வளர்ந்திருக்கும் இந்தக் கலாச்சாரம், நெஞ்சத்தில் இருக்கும் பக்தி என்ற தெம்பினால் எவ்வளவோ சாதனைகள் செய்து இருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மிகவும் வளமான கலாச்சாரமாக வளர்ந்து  வந்திருக்கிறது. எவ்வளவு வளம் என்றால்? மற்ற நாடுகள் கற்பனை கூட செய்ய முடியாத அளவிற்கு வளமான சமூகமும், கலாச்சாரமும் இங்கு உருவாக்கப்பட்டது. 

 

உங்களுக்கு தெரிந்து இருக்கும், ஐரோப்பிய நாடுகளில் இருந்தவர்கள் எப்படியாவது இங்கு வந்துவிட வேண்டும் என்ற பெரிய ஆர்வம் இருந்தது. கப்பல் ஏறி வழித் தெரியாமல் அங்குமிங்கும் அமெரிக்கா வரை சென்று, இறுதியில் இங்கு வந்தார்கள். ஏனெனில் உலகிலேயே வளமான நாடாக நாம் இருந்தது தான். 

 

இந்த வெற்றிகரமான வாழ்க்கைக்கு மூலமாக இருந்தது நம்முடைய பக்தி. சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் மட்டுமில்லாமல் அனைத்திற்கும் மேலாக முக்கியமாக 63 நாயன்மார்கள், ஆழ்வார்கள், ஒளவையார் போன்ற பக்தர்கள் பிறந்து வாழ்ந்த கலாச்சாரம் நம்முடையது.

 

இந்த தமிழ் கலாச்சாரம் பக்தியில்  ஊறி நனைந்து வளர்ந்திருக்கும் கலாச்சாரம். தமிழ் மக்கள் இதை உணர்ந்து உலகம் முழுவதும் தீவிரமாக இந்த பக்தியை கொண்டு சேர்க்க வேண்டும் . இது மிக மிகத் தேவையானது. தமிழ் கலாச்சாரத்தை குறித்து வெறுமனே பேசிப் பயனில்லை. நமக்கு அதில் பெருமை இருந்தால் அதனை உயிரோடு வைத்திருக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்டகாசமான சிறப்பம்சங்களோடு வரும் OnePlus Nord 4! - முன்பதிவு விற்பனை எப்போது?