பரணி பார்க் கல்வி நிறுவனங்களில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் மாணவர்களை அவர்தம் பெற்றோரும், மற்ற அனைவரும் இணைந்து உளமார வாழ்த்தும், தமிழ்ப் பண்பாடு போற்றும் தாய் தந்தையர் வழிபாடு, விழா நேற்று (29.01.2023) அதிகாலை 4.00 மணி முதல் 9.00 மணி வரை பரணி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பரணி கல்வி குழும தாளாளர் சா.மோகனரங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரங்கன், அறங்காவலர் மோ.சுபாஷினி முன்னிலை வகித்தனர்.
வெள்ளக்கோவில் சிவ.பெ.ஞானசம்பந்தன் ஓதுவார் அவர்கள் அம்மையப்பர் வேள்வி மற்றும் 1200 மாணவர் தம் தாய், தந்தையரை போற்றும் விதமாக தாய் தந்தையர் வழிபாடு, விழாவை திருநெறிய தமிழ் முறைப்படி சிறப்பாக செய்தார்.
பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்பிரமணியன் சிறப்புரையாற்றுகையில் “பெற்றோருக்கும் குழந்தைக்குமான தொப்புள்கொடி உறவைப் உன்னதமானது. அத்தகைய உன்னத உறவைப் போற்றி பலப்படுத்தும் வகையில் நடைபெறும் நமது தமிழர் பண்பாடு சார்ந்த இவ்விழாவில் தமிழ் மந்திரங்கள் மற்றும் திருமுறைகள் ஒலிக்க, லட்சியக் கனவோடு பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தாய், தந்தையரை போற்றி, மாணவர்கள் தங்களின் திருக்கரங்களை பெற்றோரின் பாதத்தில் பதிக்க, பெற்றோரின் திருக்கரங்களை குழந்தையின் திருமுடியில் பதிக்க நெகிழ்ச்சியுடன் உலகிற்கு தாய் தந்தையான பரமேஸ்வரன் பார்வதியின் அருளோடு தங்கள் பெற்றோரின் அருளாசியையும் பெற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றி, திறமை, ஒழுக்கத்துடன் சிறந்த குடிமகனாக திகழ அவர்களை உளமார வாழ்த்தும் வகையில் தொடர்ந்து ஏழாம் ஆண்டாக இவ்விழா கொண்டாடுவதில் பரணி கல்வி நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது” என்றும் மேலும் மாணவர்கள், பெற்றோர்கள் என மொத்தமாக 3500 பேர் கலந்து கொண்டு அம்மையப்பர் அருள் பெற்றனர் என்றும் கூறினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பரணி பார்க் முதல்வர் K.சேகர், பரணி வித்யாலயா முதல்வர் S.சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் முதல்வர் P.சாந்தி, துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.