நடிகை த்ரிஷா குறித்து அதிமுக முன்னாள் உறுப்பினர் ஏ.வி.ராஜூ பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2017ல் கூவத்தூரில் அதிமுக எம்.எ.ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது அங்கு நடிகைகளோடு அவர்கள் உல்லாசமாக இருந்ததாக கூறி, நடிகை த்ரிஷாவின் பெயரையும் குறிப்பிட்டு சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் நடிகை த்ரிஷாவிற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் ஏ.வி.ராஜூ மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக ஏ.வி.ராஜூ மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “த்ரிஷாவை இழிவாக, அருவறுக்கத்தக்க வார்த்தைகளில் பேசியது உண்மையாகவே ஒரு தரம் கெட்ட செயல். பெண்மையை யாரும் இழிவுப்படுத்திப் பேசக் கூடாது. அவர் நடிகைகள் மட்டுமல்லாமல் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் அவதூறான வார்த்தைகளை பேசியுள்ளார். இப்படியான நபர்கள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.
பாஜகவில் மேலும் பல கட்சியினர் வந்து சேர்வார்கள் என அண்ணாமலை பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார் “அதிமுக மீது உண்மையான பற்று உள்ள யாரும் கட்சி மாற மாட்டார்கள். அண்ணாமலை பூச்சாண்டி காட்ட நினைக்கிறார். அதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது. பிற கட்சிகள் வேண்டுமானால் அவரது பூச்சாண்டித்தனத்திற்கு அஞ்சலாம்” என கூறியுள்ளார்.