வெளிநாட்டு குளிர்பானங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க தடையில்லை என்று நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த உத்தரவை எதிர்த்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் ''வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தாராளமாக தண்ணீர் எடுத்துக் கொள்ளட்டும், ஆனால் அந்த தண்ணீர் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கும் தண்ணீரை எடுக்கக்கூடாது என்றும் அந்த நிறுவனங்கள் கடல்நீரை குடிநீராக்கி குளிர்பானம் தயாரிக்கட்டும்' என்றும் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
"தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 21-ம் தேதி தடை விதித்திருந்தது. தற்போது உயர் நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கி உள்ளது கவலை அளிக்கிறது. ஏற்கெனவே பருவமழை பொய்த்துப் போய் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் இன்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு என்பது பேரிடியாக உள்ளது.
பன்னாட்டுக் குளிர்பானங்கள் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்பு உணர்வால், அவற்றின் விற்பனை சரிந்துள்ளது. உணர்வுகளால் நாம் ஓரளவு வென்று விட்டாலும், சட்டரீதியாக பன்னாட்டு குளிர்பான நிறுவனம் வெற்றிபெற்றது வேதனை அளிக்கிறது. அதனால், உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறோம்.
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு தாமிரபரணி ஆற்று நீரைத்தான் நம்பியுள்ளனர். ஆகவே, ஒரு சொட்டு நீர்கூட பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் எடுக்க அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு நீர் தேவை எனில், 'கடல்நீரை குடிநீராக்கி குளிர்பானம் தயாரித்து விற்றுக்கொள்ளட்டும்'. தாமிரபரணி ஆற்றுநீர் மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள எந்த ஆற்று நீரையும் உறிஞ்சி குளிர்பானம் செய்ய அனுமதிக்கக்கூடாது" எ
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.