நான் கூறியதை சசிகலா கேட்டிருந்தால் இந்நேரம் சிறையில் இருக்க மாட்டார் என நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டு இடைத்தேர்தலில், ஜெயலலிதா அழைத்ததற்காக நான் அவருக்காக பிரச்சாரம் செய்தேன். அவரோடும், சசிகலாவோடும் பல கால கட்டங்களில் நட்போடும், ஆலோசனை செய்யும் இடத்திலும் நான் இருந்துள்ளேன்.
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலா பொதுச்செயலாளாரக நியமிக்கப்பட்ட போது நான் அமைதியாக இருந்தேன். அதன்பின், அவரை முதல்வராக்க சிலர் முயன்றனர். அதை நான் வேண்டாம் என்றேன். இது உங்களுக்கு எதிரான சூழ்ச்சி என்றேன். இதனால் நீங்கள் அடைந்து விடுவீர்கள் வீழ்ச்சி என்றேன். ஆனால், அதை அவர் கேட்கவில்லை.
நான் கூறியதை கேட்டிருந்தால் சசிகலா இருந்திருப்பார் குளுகுளு அறையிலே.. இன்று இருந்திருக்க மாட்டார் சிறையிலே.. என அடுக்கு மொழியில் டி.ஆர் பேசினார்.