சென்னை புழல் சிறையில் கடந்த 18ம் தேதி ராம்குமார் மரணம் நிகழ்ந்தது. மின்சார வயரைக் கடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், ராம்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ய தனியார் மருத்துவர் உடன் இருக்க வேண்டும் என்று கோரி ராம்குமார் தந்தை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், தொடரப்பட்ட வழக்கில், ”மூன்றாவது நீதிபதி, விசாரணை செய்து, உத்தரவு பிரப்பிக்கும் வரை, ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், ராம்குமார் உயிரைப் பறித்த சுவிட்ச் பாக்ஸ் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, சமூக வலைதளங்களில் பேசப்படுவதாவது, “ஸ்விட்ச் பாக்ஸில் இருந்த நான்கு நெட்டுகளை அவர் எப்படி எடுத்திருப்பார். ஸ்விட்ச் பாக்ஸை வாயால் கடித்து உடைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
அவ்வாறு உடைக்க முயன்றிருந்தால், ராம்குமாரின் வாயிலும் காயங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் ராம்குமாரின் வாயில் காயங்கள் இல்லை. அதேபோல் மின்சாரம் உடலில் பாய்ந்தாலும் அவர் தூக்கி வீசப்பட்டிருப்பார். அப்படி தூக்கி வீசப்பட்டிருந்தாலும் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கும்.” என்று பலர் பலவிதமாக கருத்து கூறி வருகின்றனர்.