சென்னை ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில், குற்றவாளியை அடையாளம் காணப்படும் அடையாள அணிவகுப்பு சிறையில் தொடங்கியுள்ளது.
கடந்த ஜீன் 24ஆம் தேதி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ராம்குமார்தான் குற்றவாளி என்று நிரூக்கும் ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கொலை வழக்குகளில் குற்றவாளியை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் அடையாள அணிவகுப்பு புழல் சிறையில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த அணிவகுப்பு நீதிபதி சங்கர் முன்னிலையில் நடைபெறுகிறது.
சுவாதி கொலை நடந்த போது, கொலையாளியை ரயில் நிலையத்தில் கேண்டின் ஊழியர், தமிழ்செல்வன் என்ற ஆசிரியர் மற்றும் சிலர் பார்த்துள்ளனர். எனவே அவர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும், இந்த அணிவகுப்பிற்கு ராம்குமாரின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணனும் வரவழக்கப்பட்டுள்ளார்.