சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை படுகொலை செய்த கொலையாளி பற்றி தினம் தினம் பல்வேறு தகவல்கள் வெளிவந்தவாறே உள்ளன. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார் எனவும் தகவல்கள் வருகின்றன.
விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் கொலையாளி குறித்த எந்த தகவலையும் தற்போது வெளியிட முடியாது என காவல் துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனையடுத்து குற்றவாளியிடம் காவல் துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே ஒரு நபர் மட்டும் தான் இந்த கொலையை செய்யவில்லை என்றும் இதன் பின்னணியில் வேறு சிலரும் இருக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது. கொலையாளி, ஒரு மாத காலமாக, சுவாதியை பின் தொடர்ந்திருக்கிறான்.
சுவாதி பற்றிய எல்லா தகவல்களையும் கொலையாளி, சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தன் நண்பர் ஒருவனுக்கு எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வந்துள்ளான். அதற்கான ஆவணங்களை கைப்பற்றும் பணியிலும் காவல் துறை ஈடுபட்டுள்ளனர்.
கொலையாளி தன் நண்பனுக்கு சுவாதி பற்றி அனுப்பி வந்த விவரங்களை, சுவாதியின் உறவினர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய்தவன் கூலிப்படையை சேர்ந்தவனா அல்லது அவனது நண்பன் தான் இவனை ஏவி விட்டானா என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் இந்த கொலை காதல் விவகாரத்தால் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.