பெண் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.வி.சேகர், பெண் பத்திரிக்கையாளர் குறித்து மிகவும் தரக்குறைவான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் எஸ்.வி.சேகருக்கு எதிராக பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும் இதுதொடர்பான வழக்கு சென்னை எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் மீதான வழக்கு விசாரணை மேற்கொள்ளும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நீண்ட விசாரணைக்குப் பின், எஸ்.வி சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் அபராதத் தொகை செலுத்திய பின் மேல்முறையீடு செய்ய ஏதுவாக அவரது சிறை தண்டனை தீர்ப்பானது சிறப்பு நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் சிறப்பு நீதிமன்றத்தால் தனக்கு வழங்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனு மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு தண்டனையை நிறுத்தி வைத்தனர்.