செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை அவர் கூற வேண்டும் என்றும், அவ்வாறு தொடர விரும்பினால், அவருக்கு எதிரான வழக்கை மெரிட்டில் விசாரிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்றதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்து, வெளியே வந்து மீண்டும் அமைச்சர் ஆனார். இந்த நிலையில், அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள், "அமைச்சர் ஆவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம்? போக்குவரத்து துறையில் வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?" எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், "செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? அவ்வாறு தொடர விரும்பினால், அவருக்கு எதிரான வழக்கை மெரிட்டில் விசாரிக்க வேண்டும். செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தால், இந்த வழக்கில் அரசு ஊழியர்கள் சாட்சியாக இருப்பதால், அவர்கள் பயப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும்." என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மார்ச் 4ஆம் தேதிக்குள் இதற்கான முடிவை அறிவிக்க வேண்டும் என்பதால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.