முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கை உச்சநீதிமன்றம் இன்று முடிவுக்கு கொண்டு வந்தது.
இன்று செந்தில் பாலாஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் வகிக்கக்கூடாது என்று அமலாக்கத்துறை வாதித்தது.
செந்தில் பாலாஜி தரப்பு, அவர் தற்போது அமைச்சர் அல்ல என்று விளக்கியது. ஆகவே புதிய கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றும் தெரிவித்தது. தமிழக அரசு அளித்த ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பை ஏற்று, உச்சநீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.
2023 ஜூனில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த போதும், அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். இதனால், அவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்தது. பின்பு, கடந்த பிப்ரவரியில் அவர் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
அதே ஆண்டு செப்டம்பரில், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளிவந்த அடுத்த நாளே அவர் மீண்டும் அமைச்சர் பதவியேற்றார்.
இந்நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ஜாமீன் வேண்டுமா, அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்று செந்தில் பாலாஜி முடிவு செய்ய உத்தரவிட்டனர்.
இதன்படி, அவர் முதலமைச்சரிடம் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.