ரூ.1,000 லஞ்சம் வாங்கிய காஞ்சீபுரம் சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வின் முடிவில், இந்தியாவிலே அதிக ஊழல் நிறைந்த மாநிலத்தில் தமிழகம் முதல் இடத்தைப் பிடித்தது. இதில் போக்குவரத்து துறை, காவல் துறை, சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டுமனையை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சார்பதிவாளர் சங்கரனிடம் விண்ணப்பித்தார். வேலையை முடிக்க வேண்டும் என்றால் 1000 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார் சங்கரன்.
இதனையடுத்து அந்த பெண் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் சங்கரனிடம் லஞ்சப்பணமான 1000 ரூபாயை கொடுத்துள்ளார் அந்த பெண். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், சங்கரன் உள்பட 2 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.