விளாத்திக்குளம் அருகே நிலத்தகராறில் விசாரணைக்கான போலீஸ் விசாரணைக்காக வந்த தொழிலாளியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே சூரங்குடியில் வசிப்பவர் அழகு முருகன். எம் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளர்கள்.
இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதுபற்றி ஜெக நாதன் சூரங்குடி போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, இரு தர்ப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சப் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
அப்போது, விசாரணைக்காக வந்த அழகு முருகனின் சகோதரர் ராஜகனிக்கும், சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், ராஜகனியை சப்- இன்ஸ்பெக்டர் தாக்கியதாக புகார் எழுந்தது.
இத்தாக்குதலில் காயமடைந்த ராஜகனி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி விளாத்திக்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார்.இதையடுத்து சூரங்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரத்தை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று உத்தரவிட்டார்.