Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறிவியல் முனைப்புக்கும் மொழிக்கும் என்ன சம்மந்தம்… மத்திய அரசுக்கு சு வெங்கடேசன் கேள்வி!

அறிவியல் முனைப்புக்கும் மொழிக்கும் என்ன சம்மந்தம்… மத்திய அரசுக்கு சு வெங்கடேசன் கேள்வி!
, புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:21 IST)

நாடாளுமன்ற உறுப்பினரான சு வெங்கடேசன் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் மொழித் திணிப்பு குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ‘கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (KVPY) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. +1 , +2 மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு உதவித் தொகைக்கு தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டிற்கு உதவித்தொகை மற்றும் கொடையாக ரூ 80,000 இல் இருந்து ரூ 1,12,000 வழங்கப்படும். இது போன்ற அறிவியல் முனைப்பை மாணவர்கள் மத்தியில் வளர்க்கிற திட்டங்கள் நல்லதுதான். ஆனால் தேர்வு முறை எல்லோருக்கும் நீதி தருவதாக, வாய்ப்பு வழங்குவதாக, தேர்வு எழுதுகிற சூழல் பொருந்தி வருவதாக இருக்கிறதா என்பதே கேள்வி.

ஒன்று, திறனறித் தேர்வு இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம்இந்தி மட்டுமே. மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்? இந்தியில் எழுதலாம். ஆனால் தமிழில் எழுத முடியாது என்றால் அது சமதள ஆடுகளத்தை எப்படி உறுதி செய்யும்? அறிவியல் முனைப்பிற்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம்? அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கு என்ன சம்பந்தம்? தேர்வுக்கு முன்பே கதவை அடைக்கிற பாரபட்சம் இல்லையா? தமிழ் வழி மாணவர்கள் தடை தாண்டும் ஒட்டமும்இந்தி தெரிந்த மாணவர்கள் அதே ஓடு பாதையில் தடையில்லாமல் ஓட்டமும் என்றால் என்ன போட்டி அது?

ஆகவே மாநில மொழிகளிலும் தேர்வை நடத்துங்கள் என்பது முதல் கோரிக்கை. நவம்பர் 7 அன்றுதான் தேர்வு என்பதால் கால அவகாசம் இருக்கிறது. அரசு மாநில மொழிகளிலும் வினாத் தாள்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லோருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, தேர்வுக்கான சூழல். தமிழ்நாட்டில் 9 தேர்வு மையங்கள். பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் 13 மையங்கள். தமிழ்நாடு ஒப்பீட்டளவில் பெரிய மாநிலம். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள 9 மையங்களோடு இன்னும் 4 மையங்களாவது குறைந்த பட்சம் அறிவிக்கலாம். கோவிட் சூழலில் அதிக மையங்கள் தேவை.

மூன்றாவது, விண்ணப்ப கட்டணம். பொதுப் பிரிவினருக்கு ரூ 1250, எஸ்.சி எஸ்.டி மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 625. இக் கட்டணத்தை தாங்க முடியாதவர்கள் அறிவியல் முனைப்பு கொண்டவர்கள் ஆயினும் தேர்வு எழுதக் கூட முடியாது. வெளியூர் போய் தேர்வு எழுதுபவர்கள் தங்குமிடம், உடன் வருவோர் செலவுகள், உணவுச் செலவு, போக்குவரத்து கட்டணம் ஆகியனவற்றையும் தாங்க வேண்டுமே! ஆகவே விண்ணப்ப கட்டணம் குறைக்கப்பட வேண்டும்.

செப்டம்பர் 6 விண்ணப்ப கடைசி தேதி என்பதால் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். அமைச்சரின் நல்ல பதிலை எதிர்பார்ப்போம்.’ எனக் கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனா, பாக்.-ஐ பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தாலிபன்!