கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் நீக்குதல், 7ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகியக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அரசு சார்பில் போராட்டத்தை நிறுத்துவதற்காக போராட்டக் குழுவினரின் முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் மூலம் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றது அரசு. ஆனால் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து செல்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு பொது சமூகத்திடம் ஆசிரியர்கள் குறித்த தவறானப் பிம்பத்தை உருவாக்கி வருகிறது. ஆனால் எதிர்பார்த்தற்கு மாறாக அரசு ஊழியர்களுக்குப் பல்வேறு துறையில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் இப்போது மாணவர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று (ஜனவரி 28) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இக்கலூரியின் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களுக்கு ஆதரவாக 200 மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்களுக்கு தங்கள் ஆதரவைத் தொடர்ந்து கொடுப்போம் என தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் ஆதரவுப் பெருகி வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் அரசு குழப்பத்தில் உள்ளனர்.