Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பட்டியலின இளைஞர்களின் ஆடைகளை களைந்து, சிறுநீர் கழித்து வன்கொடுமை- ராமதாஸ் கண்டனம்

பட்டியலின இளைஞர்களின் ஆடைகளை களைந்து, சிறுநீர் கழித்து  வன்கொடுமை- ராமதாஸ் கண்டனம்
, வியாழன், 2 நவம்பர் 2023 (12:30 IST)
நெல்லையில் பட்டியலின இளைஞர்களின் ஆடைகளை களைந்து, சிறுநீர் கழித்து வன்கொடுமை நடத்தியதற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது:

''நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின் ஆடைகளை களைந்து, அவர்கள் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறது. அவர்கள் வைத்திருந்த பற்று அட்டையை பறித்து அதிலிருந்து ரூ.5000 பணத்தை கொள்ளையடித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி வீடு திரும்பியுள்ளனர். பட்டியலின இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்தக் கொடுமை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இரு சக்கர ஊர்தியில் வந்த பட்டியலின இளைஞர்களை தடுத்து நிறுத்திய 6 பேர் கொண்ட கும்பல், முதலில் அவர்களின் சாதி குறித்து விசாரித்திருக்கிறது. அவர்கள் பட்டியலினத்தவர்கள் என்று தெரியவந்த பிறகே அவர்களை தாக்கி வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வகையில் இது சாதிய நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது உறுதியாகிறது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றாலும் கூட, இதன் பின்னணியில் வேறு எவரேனும் இருக்கிறார்களா? என்பதை விசாரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் அரசு பள்ளி ஒன்றில், பிற மாணவர்களால் தமக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை குறித்து ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்ததற்காக சின்னதுரை என்ற மாணவரை ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் வெட்டியது. அந்தக் கொடிய நிகழ்வு நடந்து இரு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அதே மாவட்டத்தில் மீண்டும் ஒரு கொடிய சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட வழக்கில் இதுவரை எவர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அரசுத் தரப்பில் செய்யப்படும் இத்தகைய தாமதங்கள் தான் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தத் துடிக்கும் சக்திகளுக்கு துணிவை வழங்குகிறது. எனவே, வேங்கைவயல் கொடுமை குறித்த வழக்கு உள்ளிட்ட பட்டியலின மக்கள் தாக்கப்பட்ட அனைத்து வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதுடன், பட்டியலின மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழலை தமிழக அரசு உருவாக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100% உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!