Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை -அன்புமணி ராமதாஸ்

மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை  -அன்புமணி ராமதாஸ்
, சனி, 14 அக்டோபர் 2023 (12:38 IST)
மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி செய்த விவகாரத்தில் மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மணலை எடுத்துச் சென்ற வாகனங்களை பிடித்த ஆயக்குடி கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி, அவரது உதவியாளர் மகுடீஸ்வரன், இரு காவலர்கள் ஆகிய நால்வரை அவர்கள் மீது ஆற்று மணலைக் கொட்டியும், சரக்குந்தை ஏற்றியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், இதுவரை அவர்களை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அண்மைக்காலமாக மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. மணல் கொள்ளையை தடுக்க முயலும் நேர்மையான அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிகள் நடக்கின்றன. பல இடங்களில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றனர். ஈடு செய்ய முடியாத இயற்கை வளமான மணல் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதும், அதைத் தடுக்க எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படாததும் மிகவும் வருத்தமளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன் வெட்டிக் கொல்லப்பட்டது, சேலம் மாவட்டம் மானாத்தாள் பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலரை வெட்ட அரிவாளுடன் துரத்தியது ஆகியவற்றுக்கு அடுத்து பழனி அருகே நிகழ்ந்துள்ள கொலை முயற்சி எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

மணல் கொள்ளையில் ஈடுபட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்ற நிலையை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும். முறப்பநாடு பகுதியில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தரப்பட்டதைப் போன்று, இந்த வழக்கிலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, விரைவாக தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதன் மூலம் மணல் கொள்ளைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹமாஸை அடக்க நாங்க வறோம்..! – இஸ்ரேலுக்கு கோரிக்கை வைத்த இந்து சாமியார்!