கிருஷ்ணகிரி அருகே தெரு நாய் கடித்ததில் 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட, இந்தியா முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே 9 வயது சிறுவன் நந்திஷை தெரு நாய் கடித்ததில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து நாட்களுக்கு முன்னர், நந்திஷ் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென தெரு நாய் கடித்தது. ஆனால், அந்த சம்பவத்தை வீட்டில் கூறாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், சிறுவன் நந்திஷை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் டாக்டரிடம் நந்திஷ் நாய் கடித்ததை கூறியுள்ளார்.
உடனடியாக சிறுவன் நந்திஷ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், ஆம்புலன்ஸுக்குள் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து, தெரு நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.