ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை ; சிக்காத குற்றவாளிகள் : திணறும் போலீசார்
ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை ; சிக்காத குற்றவாளிகள் : திணறும் போலீசார்
சேலத்திலிருந்து சென்னை புறப்பட்டு சென்ற ரயிலின் மேற்கூரையை பிரித்து ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 50 நாட்கள் ஆகியும் இன்னும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கடந்த ஆகஸ்டு 8ம் தேதி சேலத்திலிருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்ட சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் மேற்கூரையை பெயர்த்தெடுத்து ரூ.5.75 கோடி ரூபாய் கொள்ளை போனது. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த கொள்ளையில், வெளிமாநில கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும் முக்கியமான தகவல்களோ, தடயங்களோ போலீசாருக்கு இதுவரை கிடைக்கவில்லை.
கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால், கொள்ளையர்களின் உருவங்களும் பதிவாகவில்லை.
முக்கியமாக, கொள்ளையடிக்கப்பட்ட ரயில் பெட்டியில் எந்த கைரேகையும் பதிவாகவில்லை. இது போலீசாருக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனவே கை தேர்ந்த கொள்ளையர்களால் மட்டுமே இதுபோன்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முடியும் என போலீசார் உறுதியாக நம்புகின்றனர்.
அப்படியே ஒருவேளை கைரேகை பதிவாகியிருந்தாலும் காற்றின் வேகம், தட்பவெட்பநிலை மற்றும் பொருட்களின் தன்மை ஆகியவற்றின் காரணமாக, அவைகள் அழிந்து விட வாய்ப்பிருக்கிறது. மேலும், கொள்ளையர்கள் கையுறை அணிந்து கொண்டு கொள்ளையடித்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இத்தனை நாட்கள் ஆகியும், எந்த துப்புக் கிடைக்காமல் இருப்பது போலீசாரின் விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதால், போலீசார் வேறு கோணத்தில் விசாரணையை தொடங்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.