நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க முடியாமல் மனம் நொந்து போன் அரியலூர் அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரது மரணத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டனக்குரல் எழுந்து வருகிறது
இந்த நிலையில் இது குறித்துச் சமூகச் செயல்பாட்டாளர் ஓவியா பேட்டி ஒன்றில் கூறியதாவது: அனிதாவின் தற்கொலை மிகவும் வேதனையானது. மன அழுத்தத்தைத் தருகிறது. ஆனபோதும், தற்கொலை எதற்கும் தீர்வாகி விடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தோல்விகளை எதிர்கொள்ள நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு இன்னும் தெளிவாகக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.
அனிதா, ஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து ரொம்பவும் கஷ்டப்பட்டுப் படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தார். சின்ன வயதிலிருந்து மாநில கல்விமுறையில் படித்து வந்தவர். அந்த முறையில்தான் தனது லட்சியமான மருத்துவப் படிப்பையும் படிக்கப் போகிறோம் என்று நினைத்திருந்தவர். அதனால், இடையில் திடீர் மாற்றமாக நுழைத்த நீட் எனும் நுழைவுத் தேர்வு பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்க வில்லை. நீட் தேர்வைக் கண்டு அச்சத்தோடே இருந்திருக்கிறார். மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி இந்த ஆண்டு நிச்சயம் நீட் தேர்வு வராது என்ற நம்பிக்கையை அனிதா போன்ற மாணவர்களுக்குத் தொடர்ந்து அளித்துக்கொண்டே வந்தது. அந்த நம்பிக்கையில் தனது கனவு எப்படியும் நிறைவேறும் என்று காத்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரின் நம்பிக்கை பொய்த்துப்போனது. அதன் மன அழுத்தமே இந்த முடிவை நோக்கித் தள்ளியுள்ளது.
அனிதாவின் மரணத்துக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமல்ல நீதிமன்றமும் பொறுப்பேற்க வேண்டும். சி.பி.எஸ்.ஸி மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கவலைப்பட்ட நீதிபதிகள் இப்போது தன் உயிரையே நீத்துகொண்ட அனிதாவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
சமீபத்தில் ஒரு மாணவி ஒருவர் தற்கொலைச் செய்துகொண்ட செய்தியைப் படித்திருப்பீர்கள். ஆடையில் ரத்தக் கறை இருந்ததால், ஆசிரியர் மீது சந்தேகம் கொண்டு கைதுசெய்கிறார்கள் எனில், அனிதாவின் மரணத்துக்குக் காரணமான எடப்பாடி அரசு, மத்திய அரசு மீது யார்தான் கேள்விகள் எழுப்புவது?
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விடவும் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு, திராவிட இயக்கங்கள் சமூக நீதியைப் பின்பற்றி இட ஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துகிறார்கள். அதனாலேயே பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியில் தேர்ச்சியடைந்து, பொருளாதார நிலையிலும் வளர்ச்சியடைந்துள்ளனர். அதனால் தமிழகத்தில் கல்வியிலும் மருத்துவத்திலும் சிறப்பான இடத்தில் உள்ளது. இந்த நிலையைச் சீரழிக்கவே நீட் எனும் அம்பை மத்திய அரசு எய்திருக்கிறது. இது இங்கே நிலவும் சமூக நீதியை குலைக்கவே செய்யும். இதை நாம் தொடர்ந்து எதிர்த்தாக வேண்டிய சூழலில் உள்ளோம் என்பதை மறுக்க முடியாது. ஆன போதும் அனிதாவைப் போன்று யாரும் தற்கொலை எனும் நிலையை நோக்கிச் செல்வதை கை விட வேண்டும்."
இவ்வாறு சமூக செயல்பாட்டாளர் ஓவியா தெரிவித்தார்