தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை வெளிக்கொணர்ந்து வரும் முயற்சியாக கீழடியை ஆய்வு செய்ததில் மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழி ஆகியவை கிடைத்த நிலையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கீழடியை பார்வையிட்டார்.
ஹராப்பா மொகஞ்சாதாரோ போன்ற பண்டைய நாகரீகங்களின் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கீழடி ஆகிய நாகரீகங்கள் திகழ்வதாக பல வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வந்த நிலையில், சமீபத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியில் அதனை மெய்ப்பிக்கும் வகையில் பண்டைய தமிழர்களின் முதுமக்கள் தாழி, மண்பாண்டங்கள் ஆகிய பொருட்கள் கிடைத்தன.
இந்த செய்தி தமிழகம் மட்டுமல்ல இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்தது. இது குறித்து பல வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கீழடியை பார்வையிட்டார். முன்னதாக கீழடியில் கண்டுபிடித்த பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
மேலும் கீழடியை சுற்றியுள்ள பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் திமுகவினர் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கீழடியை பார்வையிட்டது கூடுதல் தகவல்.