Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் தற்கொலை குறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்ட ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (06:26 IST)
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை காவலர்கள் தெரிவித்தனர்.


 
இந்நிலையில், ராம்குமார் தற்கொலை தொடர்பாக திமுக பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இளம்பெண் சுவாதி பட்டப்பகலில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், தமிழக காவல்துறை அலட்சியம் காட்டியது. அதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றமே நேரடியாக தலையிட்டு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்த பிறகு இந்த வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என்று காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது நடவடிக்கையின் போதே ராம்குமார் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதில் ராம்குமாரின் தந்தையும் அவரது வழக்கறிஞரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அப்போது முதலே இந்த வழக்கின் உண்மையான நிலை குறித்த அடுத்தடுத்து சந்தேகங்கள் எழுந்த நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்வயரைக் கடித்து, தற்கொலை செய்து கொண்டார் என சிறைத்துறையினர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியும் மர்மமும் நிறைந்ததாக உள்ளது.

ராம்குமாரின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட இளைஞர் ராம்குமார், மிகவும் பாதுகாப்பு இருக்கக் கூடிய சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்பது ஏற்கக்கூடியதாகவும் நம்பும்படியும் இல்லை. அண்மையில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் மீது சக கைதி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்த சில நாட்களுக்குள் சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை என்பது அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் தருவதாக அமைந்து இருக்கிறது.

உயர்நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுத்த வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமாரின் பாதுகாப்பைக் கூட சிறைத் துறையால் உறுதி செய்ய முடியவில்லை என்பது வெட்க கேடாக இருப்பது மட்டுமின்றி பல சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

ஜெயலலிதா தலைமையிலான அரசும் அதன் கீழ் உள்ள காவல்துறை மற்றும் சிறைத்துறையின் நிர்வாகமும் மிகவும் மோசமடைந்து சீர் குலைந்து விட்டது என்பதற்கு பேரறிவாளன் மீதான கொடூரத் தாக்குதலும், ராம்குமார் மர்ம மரணமும் சாட்சியங்களாக இருக்கின்றன. ராம்குமார் மரணத்தின் மூலமாக இளம்பெண் சுவாதி கொலை வழக்கின் உண்மைகளை மூடி மறைக்க அரசும், காவல்துறையும் முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது.

இது தவிர பொதுமக்கள் மனதிலும் பத்திரிகைகளிலும் ராம்குமார் பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் மத்தியிலும் எழப்பப்பட்ட சந்தேகங்களுக்கு இந்த தற்கொலை மேலும் வலு சேர்த்து விட்டது. ஆகவே ராம்குமார் தற்கொலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று  கூறியுள்ளார்.

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments