ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அமைய இருக்கும் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஹார்வர்டு பல்கலைக்கழகம் 382 ஆண்டுகள் பழமையானது. சில உலகத் தலைவர்களையும், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலரையும் பெற்றுத்தந்த பெருமைமிக்கது. 382 ஆண்டுகள் பழைமையான ஒரு பல்கலைக் கழகத்தில் 3000 ஆண்டுகள் மூத்த மொழியான தமிழ் அமரப்போவது அந்தப் பல்கலைக் கழகத்திற்குத்தான் பெருமை.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் செம்மொழியான தமிழுக்கு தனி இருக்கை அமைப்பதற்கு ரூ.40 கோடி தேவைபட்டது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ் இருக்கைக்காக ரூ.1 கோடி நிதி உதவி வழங்குவதாக நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். அதன்படி, ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் மு.ஆறுமுகத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.