எல்.ஐ.சி இணையதளம் மூலம் இந்தி திணிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்: எல்.ஐ.சி. இணையதளம் இந்தி திணிப்புக்கான பிரச்சார கருவியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது!"
"இது இந்தியாவின் பன்முகத்தன்மையை மிதித்து, பலவந்தமாக கலாச்சார மற்றும் மொழி திணிப்பு தவிர வேறில்லை. எல்ஐசி அனைத்து இந்தியர்களின் ஆதரவுடன் வளர்ந்தது. அதன் பங்களிப்பாளர்களில் பெரும்பான்மையினரைக் ஏமாற்ற எவ்வளவு தைரியம்? இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்,
எடப்பாடி பழனிசாமி: பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதளத்தில் இயல்பு நிலை மொழியாக (Default Language) இந்தி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LIC-யின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலை உள்ளது.
எங்கு, எதில் எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.
மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயல். அது ஏற்புடையதல்ல.
அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றவும், இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
டாக்டர் ராமதாஸ்: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்.ஐ.சியின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் இதுவரை ஆங்கில மொழியில் இருந்த நிலையில் இப்போது இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. இது பிற மொழி பேசும் மக்கள் மீதான அப்பட்டமான இந்தித் திணிப்பு ஆகும். எல்.ஐ.சி நிறுவனத்தின் இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் உள்ள அனைத்து மொழி பேசும் மக்களும் எல்.ஐ.சியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் நிலையில், இந்திக்கு மட்டும் திடீர் முன்னுரிமை அளிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ரூ.10 மதிப்புள்ள நுகர்வோர் பொருட்கள் கூட தமிழ்நாட்டுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் போது அதன் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் தான் அச்சிடப்படுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ள எல்.ஐ.சி அதன் இணையதளத்தின் முதன்மைப் பக்கத்தை இந்தியில் மட்டும் வைத்திருப்பதும், ஆங்கில மொழிச் சேவை வேண்டும் என்றால் அதை தேடிச் சென்று தேர்வு செய்ய வேண்டிய சூழலை உருவாக்கியிருப்பதும் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.
மத்திய அரசும், மத்திய அரசின் நிறுவனங்களும் காலம் காலமாக தமிழ் உள்ளிட்ட பிற மொழி பேசும் மக்கள் மீது தொடர்ந்து இந்தியைத் திணிக்க முயன்று வருகின்றன. இந்த முயற்சியில் அவை பல முறை சூடுபட்டாலும் கூட, அந்த முயற்சியை மட்டும் கைவிடுவதில்லை. மத்திய அரசாக இருந்தாலும், எல்.ஐ.சியாக இருந்தாலும் தாங்கள் அனைத்து மக்களுக்கும் உரித்தானவர்கள், இந்தி பேசும் மக்களுக்கு மட்டும் சொந்தமானவர்கள் அல்ல என்ற அடிப்படையை உணர வேண்டும்.
எல்.ஐ.சி இணையதளத்தின் முகப்புப் பக்கத்தை உடனடியாக ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும். இணைய தளத்தில் இப்போது இந்தி, ஆங்கிலம் ஆகிய இருமொழிச் சேவைகள் மட்டுமே உள்ள நிலையில் தமிழ்மொழிச் சேவையையும் எல்.ஐ.சி உடனடியாகத் தொடங்க வேண்டும்.