கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறை காட்டிய வேகத்தை எஸ்.வி.சேகர் மற்றும் ஹெச்.ராஜாவை கைது செய்ய ஏன் காட்டவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏவுக்கு அக்டோபர் 5ம் தேதி நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தந்தை பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், உயர்நீதிமன்றத்தையும், தமிழ்நாடு காவல்துறையையும் ஒட்டுமொத்தமாக மிகவும் கேவலமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்ததாலும், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களின் இல்லத்தரசிகளைப் பற்றி அநாகரிகமான முறையில் பேசியதாலும், பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், இதுவரை பா.ஜ.க. தேசியச் செயலாளர் திரு எச். ராஜா கைது செய்யப்படவில்லை.
அவர் காவல்துறைக்கே - காவல்துறையைக் கட்டுப்படுத்தும் தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் "நான் தலைமறைவாகவில்லை" என்று மேடைதோறும் பேசி, அதற்கு காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்பு வழங்கி வருவது என்னவகை நியாயம் என்று புரியவில்லை.
அதேபோல், பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்ட திரு எஸ்.வி.சேகரின் முன் ஜாமின் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே கைது செய்ய தடை விதிக்க மறுத்தும் கூட, அவரை அ.தி.மு.க அரசு கைது செய்யத் தயக்கம் காட்டுவது, என்ன வகை அணுகுமுறை என்றும் விளங்கவில்லை.
ஆகவே, திரு கருணாஸுக்கு ஒரு சட்டம், திரு எச்.ராஜா மற்றும் திரு எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டம் என்ற அ.தி.மு.க அரசின் பாகுபாடான போக்கு மிகவும் அநீதியானது, கண்டிக்கத்தக்கது. ஒரு போலீஸ் அதிகாரியை விமர்சித்தது குற்றம் என்றால், ஒட்டுமொத்த காவல்துறையையும், உயர்நீதிமன்றத்தையும் மிக மோசமாக விமர்சித்த
திரு எச். ராஜாவை கைது செய்யாததைப் பார்க்கும் போது, எடப்பாடி திரு பழனிசாமியை முதலமைச்சராக்கிய "கூவத்தூர் மர்மமும் ரகசியமும்” வெளிச்சத்துக்கு வந்து விடக்கூடாது; தமிழ்மக்களின் ஏச்சையும் பேச்சையும் இதிலாவது தவிர்க்க வேண்டும்; என்ற காரணத்திற்காகவே திரு கருணாஸை கைது செய்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.
உலை வாயை மூடும் அற்ப எண்ணம் இதுவாகும். அ.தி.மு.க அரசில் "சட்டத்தின் ஆட்சி" குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல், சிதறிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதைக் கண்டு, பொதுமக்கள் வெட்கித் தலைகுனிகிறார்கள்! எனவே, கைது செய்ய வேண்டியவர்களை, அவர்களுடைய பின்னணியைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தாமதிக்காமல் கைது செய்ய வேண்டும்; விடுவிக்க வேண்டியவர்களை உடனே விடுவிக்க வேண்டும்.
என அவர் குறிப்பிட்டுள்ளார்.