தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று குமரி மாவட்டம் சென்று ஒரு மீனவ கிராமத்துக்கு கூட செல்லாமல் வந்துவிட்டார். இது குறித்து விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மீனவர்கள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர் என்று மீன் வளத்துறை அமைச்சர், துணை முதலமைச்சர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணிக்கையை சொல்கிறார்கள். இதில் எது உண்மை என்று தெரியவில்லை.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏதோ மனது வந்து நேற்று காலை குமரி சென்று மாலை திரும்பிவிட்டார். ஆர்கே நகர் தேர்தலில் காட்டும் அக்கறையைக் கூட அவர் கன்னியாகுமரி மீது காட்டவில்லை. எனவே நாங்கள் ஆளுநரை சந்தித்து இது தொடர்பாக முறையிட்டோம்.
கன்னியாகுமரி மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது, குமரியை தேசியப் பேரிடர் நேர்ந்த மாவட்டமாகவும் அறிவிப்பது தொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆளுநர் எங்கள் மனுவைப் படித்துப் பார்த்து, அதனை பிரதமரிடம் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார். தற்போது சற்று நம்பிக்கை வந்துள்ளது என கூறினார்.