தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் இன்று ஒரே நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 12 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தற்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.06 லட்சம் மாணவ, மாணவிகளில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 93.76 சதவீதமாக உள்ளது. இதில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 90.96 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.32 சதவீதமாகவும் உள்ளது.
அதுபோல 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 9.12 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8.24 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 90.07 சதவீதமாக உள்ளது. இதில் மாணவர்கள் 85.83 சதவீதமும், மாணவிகள் 94.38 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரு வகுப்புகளிலும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் ஜூன் 24ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொதுத்தேர்வு முடிவுகளை tnresults.nic.in , dge.tn.nic.in உள்ளிட்ட வலைதளங்களில் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தலைமை நூலகங்கள் மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.