தமிழ்நாட்டில் இன்புளூவன்சா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்புளூவன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று இன்புளூவன்சா காய்ச்சல் மருத்துவத்திற்காக 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 476 நடமாடும் மருத்துவக்குழுக்கள் பல பகுதிகளுக்கு மக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் அளிக்க உள்ளனர்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தற்போது இன்புளூவென்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 371 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 5 வயதிற்கு உட்பட்ட 46 பேரும், 5 முதல் 14 வயதிற்கு உட்பட்ட 60 பேரும் உள்ளனர். ஆனால் இந்த காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பெரிய அளவில் பயப்பட தேவையில்லை. இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.