4 நாட்கள் தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து 3 ஆயிரம் பஸ்களில் 1.65 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.
ஏப்ரல் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து நேற்றும் இன்றும் 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதேபோல் 17 மற்றும் 18 ஆம் தேதி தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து 1,200 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் 900 சிறப்பு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் சேர்த்து மொத்தம் 3,000 பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பஸ்கள் மூலம் சென்னையில் இருந்து ஒரு லட்சத்து 65,000 பேர் பயணம் செய்துள்ளனர். வெளியூர் செல்லும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நள்ளிரவு 1 மணி வரை பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி செல்லக்கூடிய பயணிகள் அதிகமாக இருந்ததால் அங்கு அதிக பஸ்கள் இயக்கப்பட்டன.