ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு சபாநாயகர் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை சிறப்பு அவசர கூட்டம் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து அந்த மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட இருக்கிறதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்த போது ஆளுநர், குடியரசுத் தலைவர், நீதிமன்றம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் கிடையாது என்றும் தமிழக அரசு கொண்டுவரும் மசோதாக்களை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் தரவேண்டும் என்றும் அவர் கூறினார். பொதுப்பட்டியலில் உள்ளதால் கல்வி தொடர்பாக முறையிட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறிய அவர் இரண்டாவது முறையாக அனுப்பிய நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவிட்டார் என்றும் கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளித்தார்.