சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆனால் அப்பாவு சபாநாயகராக தொடர அதிக ஆதரவு கிடைத்ததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் சபாநாயகர் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் கூறியதாவது:
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பற்றோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு. அதிமுக ஆட்சியில் சபாநாயகர்கள் நடந்து கொண்டது போல் தற்போதைய பேரவைத் தலைவர் அப்பாவு நடந்து கொள்வதில்லை. அரசு மீது குற்றம், குறை கூற முடியாதவர்கள், இவ்வாறு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
எனது தலையீடோ, அமைச்சர்களின் தலையீடோ இல்லாத வகையில் தான் சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். சபாநாயகர் அப்பாவு ஜனநாயக நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மற்றவர்கள் மனம் வருந்தாத வகையில் தன்னுடைய நடவடிக்கைகளை அமைத்து கொண்டவர். நேர்மையான கருத்துகளை ஆணித்தரமாக எடுத்துக் கூறக்கூடியவர்.
கனிவானவர், அதே நேரத்தில் கண்டிப்பானவர். இவை இரண்டுமே பேரவைக்கு தேவை என்பதை ஏற்றுக் கொள்வீர்கள். இவை இல்லாவிட்டால் பேரவை கண்ணியத்தோடு, கட்டுப்பாடோடும் இருக்காது என பேசினார்.