பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்டதாகக் கூறி தூத்துக்குடி விமானத்தில் கைது செய்யப்பட்ட சோபியாவின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 10 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்ற போது அவரது அருகில் உட்கார்ந்திருந்த சோபியா என்ற இளம்பெண் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் தூத்துகுடி விமான நிலையம் வரை தொடர்ந்தது.
இதனையடுத்து தமிழிசை செளந்தரராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை கைது செய்த போலீசார் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி, சோபியாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்
சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இயக்குனர் பாரதிராஜா உள்பட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சோபியாவின் தந்தை தன்னையும் தன் குடும்பத்தாரையும் தமிழிசை உள்ளிட்ட 10 பேர் மிரட்டுவதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.