ரூ. 5 ஆயிரத்திற்காக கோழிப்பண்ணையில் அடமானமாக விட்டு சென்ற சிறுவனை அதிகாரிகள் மீட்டனர்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் குழந்தை தொழிலாளர் வேலை பார்ப்பதாக, வேலூர் மாவட்ட குழந்தை தொழிலாளர் நல அலுவலகத்துக்கு புகார் வந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் கூரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 13), கோழி பண்ணையில் கடந்த 5 மாதமாக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.
முருகனின் தந்தை கார்த்தி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ரூ.5 ஆயிரம் வாங்கி கொண்டு, அடமானமாக முருகனை விட்டு சென்றது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த முருகனை மீட்டனர்.
இதுகுறித்து அகவலம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகாந்தன் நெமிலி போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகார் மனுவில், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர் ஷரீப் என்பவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.