Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள்

பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள்
, வெள்ளி, 4 ஜூலை 2014 (19:42 IST)
திருநெல்வேலியில் முதியவருக்குப் பேய் பிடித்ததாக நினைத்து, அவரது தலையில் உறவினர்கள் அடித்த 3 அங்குல ஆணியை மருத்துவர்கள் அகற்றினர்.

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர், 60 வயதுடைய தொழிலாளி சொக்கலிங்கம். அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

உறவினர்கள் சொக்கலிங்கத்துக்குப் பேய் பிடித்து இருப்பதாகக் கருதினர். எனவே, கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று பேயை விரட்டுவதற்காக பூஜைகள் நடத்தினர். பின்னர் சொக்கலிங்கத்துக்குப் பிடித்துள்ள பேயை விரட்டுவதற்காக அவருடைய தலையில் ஆணி அடித்துள்ளனர்.

இதனால் சொக்கலிங்கத்துக்கு திடீரென்று இடது கை, கால் செயல் இழந்தது. அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக நினைத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பக்கவாத நோயால் அவர் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். எனவே, அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அவரது உச்சந் தலையில் 3 அங்குல நீளமுடைய ஆணி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நரம்பியல் துறை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, சொக்கலிங்கம் தலையில் இருந்த ஆணியை அகற்றினார்கள். அதன் பின்னர் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையில் சொக்கலிங்கம் குணமடைந்தார்.

இது குறித்து மருத்துவமனை டீன் துளசிராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"சொக்கலிங்கத்தின் தலையில் ஆணி அடித்ததால் அவரது கை, கால்கள் செயல் இழந்தன. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவர் பூரணமாக குணம் அடைந்துள்ளார்.

மூளையில் எந்த சேதமும் ஏற்படாத வகையில், அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாகத் தலையில் பெரிய காயம் ஏற்பட்டால், மண்டை ஓட்டில் சேதம் ஏற்பட்டு, மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், ஆணி அடித்த போது அவரது மூளையில் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். வீடு திரும்பிய சொக்கலிங்கம் தற்போது மீண்டும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தார். அப்போது அவர் பூரண குணம் அடைந்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil