தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - களம் நமதே! எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் கோப்பை-2023 மா நில விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களின் திறமையை உலகறியச் செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த முதலமைச்சர் கோப்பை -2023 வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு SNJ குழுமம் தங்கள் பங்களிப்பாக ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளது.
இதுபற்றி அமைச்சர் உதய நிதி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பை உலகத்தரத்திற்கு உயர்த்தவும், நம் விளையாட்டு வீரர்களின் திறமைக்கு துணை நிற்கவும், மாண்புமிகு முதலமைச்சர் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு SNJ குழுமம் தங்கள் பங்களிப்பாக ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளது.
நம் வீரர்-வீராங்கனைகளின் திறமைகளைச் சாதனைகளாக்கும் முயற்சிக்கு வலுசேர்த்த அந்நிறுவனத்துக்கு என் அன்பும், நன்றியும் என்று தெரிவித்துள்ளார்.