Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர்களை கைது செய்வதா? தகுந்த பாடம் புகட்டுவார்கள்: டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை..!

ஆசிரியர்களை கைது செய்வதா? தகுந்த பாடம் புகட்டுவார்கள்: டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை..!

Siva

, செவ்வாய், 10 டிசம்பர் 2024 (16:20 IST)
பணிநிலைப்பு கோரி போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை கைது செய்வதா? திமுகவின் துரோகம்,  அடக்குமுறைக்கு சரியான பாடம் புகட்டுவார்கள்!
என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணிநிலைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முயன்ற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர சிறப்பாசிரியர்களை கைது செய்து அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை தமிழக அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த அடக்குமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. 
 
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. அரசுப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012ஆம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 12 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் வலியுறுத்தல் காரணமாகத்தான் இதுவும் சாத்தியமானது. 
 
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டுமே பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. பணிநிலைப்பு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களை அழைத்து பேச்சு நடத்தியிருக்க வேண்டும். 
 
ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பதிலாக  மாநில திட்ட இயக்குநர் நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆசிரியர்களின் பிரச்சினை குறித்து அவர்களுடன் பேச்சு நடத்துவதற்குகூட நேரம் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை இருக்கிறது என்பது தெரியவில்லை. தற்காலிக ஆசிரியர்கள் எவரும் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதால் பணிநிலைப்புப் பெறுவதற்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. 
 
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழை ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. திமுக அரசின் துரோகம் மற்றும் அடக்குமுறைக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான பாடம் புகட்டுவார்கள்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜ்யசபா அவைத்தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: இண்டியா' கூட்டணி அதிரடி..!