Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவிகள் பாலியல் விவகாரம்.! தாமாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!!

highcourt

Senthil Velan

, வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (12:34 IST)
கிருஷ்ணகிரியில்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டுள்ளது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார்  பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல்  9-ம் தேதி வரை என்சிசி பயிற்சி முகாம் உரிய அனுமதி பெறாமல் போலியாக நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கவைக்கப்பட்டனர். கலையரங்கில் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது மாணவியை  என்சிசி பயிற்றுநரும் காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன்,  பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதுதொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் அனைத்து மகளிர் போலீஸார் பள்ளி முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்சிசி பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி, சிவராமன் ஆகியோரை கைது செய்தனர்.
 
இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சிவராமன், எலி மருந்து உட்கொண்டு  தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இந்நிலையில் மாணவிகள் பாலியல் விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே தாமாக முன் வந்து விசாரிக்க கோரி  காங்கிரஸ் வழக்கறிஞரான ஏ.பி. சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் முறையீடு செய்தார்.

 
இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம்  வழக்கு தொடரவுள்ளதாகவும், அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி விசா இலவசம்.. ஈஸியா இலங்கை போகலாம்? - இலங்கை அரசு கொடுத்த அறிவிப்பு!