செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பியதும் திமுக தான், அவரை வரவேற்பதும் திமுக தான் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 58 முறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், அடிப்படை உரிமை கருதி ஜாமீன் வழங்கப்படுள்ளது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி போரூரில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், செந்தில் பாலாஜி தியாகம் செய்தா? சிறைக்கு சென்றார் என்று கேள்வி எழுப்பினார்.
செந்தில் பாலாஜி தியாகி என்றால் சுதந்திரத்திற்காக செக்கிழுத்த தியாகிகள் யார் என்று காட்டமாக பதில் அளித்த சீமான், ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜியை சிறைக்கு அனுப்பியதும் திமுக தான், தற்போது வரவேற்பதும் திமுக தான் என்று கடுமையாக சாடினார்.