Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடுக… சீமான் வலியுறுத்தல்!

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிடுக… சீமான் வலியுறுத்தல்!
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (12:34 IST)
தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய சீமான் வலியுறுத்தல்.


இது குறித்து விரிவாக அறிக்கை வாயிலாக நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்துள்ளதாவது, தற்போது, கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி(B.Ed) மாணவர்களையும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி((M.Ed) மாணவர்களையும் அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக வெளியாகும் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக அரசின் தான்தோன்றித்தனமான செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

அரசு ஊழியர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளிகளில் காலியாகவுள்ள 13000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மாதம் 7500 முதல் 12000 ரூபாய் என மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை திமுக அரசு வெளியிட்ட உடனேயே நாம் தமிழர் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்தது. நிதிப்பற்றாக்குறையைக் காரணம்காட்டி அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளின் கல்வியை சிதைக்க நினைப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மை என்று கடுமையாகக் கண்டித்ததோடு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், தனியார்ப் பள்ளிகளைவிட மிகக்குறைந்த ஊதியம் மற்றும் பணிப்பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் தற்காலிக ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தேர்வில் வென்றவர்களில் பெரும்பாலானோர் முன்வரவில்லை.

13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு, தேர்வில் வென்றவர்களில் வெறும் 2 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளது, திராவிட மாடல் அரசின் தவறான முடிவுக்கு ஆசிரியர் பெருமக்கள் கொடுத்த சவுக்கடியாகும். ஆனால், அதற்குப் பின்பும் திமுக அரசு படிப்பினை ஏதும் கற்காமல், கல்லூரிகளில் தற்போது பயின்றுகொண்டிருக்கும் இளங்கலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி மாணவர்களையும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி மாணவர்களையும் அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமித்து, பள்ளி மாணவர்களுக்குப் பாடமெடுக்கச் செய்ய உள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப்பள்ளிகளை முற்றுமுழுதாகச் சீர்குலைக்க திமுக அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கல்லூரிகளில் பயின்றுகொண்டிருக்கும் மாணவர்களை, பள்ளி மாணவர்களுக்குப் பாடமெடுக்கச் செய்வதென்பது அறிவுடமையாகாது. இதனால் பள்ளி மாணவர்களின் கல்வி சீரழிவதோடு, பயிற்சியில் இருக்கும் மாணவர்களும் தங்களது கல்வியில் முழுக்கவனத்தைச் செலுத்த முடியாமல் பாதிக்கப்படுவார்கள். திமுக அரசு நிதிச்சுமையைக் காரணம்காட்டி தகுதியுடைய ஆசிரியர்களை நியமிக்காமல் பின்தங்கிய, கிராமப்புற, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும்.

திமுக அரசின் இந்நடவடிக்கை, நிதி இல்லாத போதும் ஊர்கள்தோறும் பள்ளிகள் திறந்து, மக்களிடம் கையேந்தி மதிய உணவளித்து, தமிழ்நாட்டில் கல்லாதோரே இல்லாதோராக்க ஐம்பதாண்டுகள் முன்பே அடித்தளமமைத்த கர்மவீரர் காமராசரின் கனவினை தவிடுபொடியாக்கும் கொடுஞ்செயலாகும். கோடிக்கணக்கில் செலவழித்துப் பேனாவிற்குச் சிலைவைக்கப் பணம் இருக்கும் அரசிடம், ஆசிரியர்களை நியமிக்கப் பணமில்லையா? தமிழ்ப் பிள்ளைகளின் கல்விக்கு உதவாது, கோடிகளைக் கடலில் கொட்டி உருவாக்கப்படும் பேனாவால் யாருக்கு என்ன பயன்?

ஆகவே, தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களை அரசுப் பள்ளிகளுக்குத் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கும் முடிவினை கைவிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று பத்தாண்டிற்கும் மேலாகப் பணி நியமனத்திற்காகக் காத்திருப்பவர்களை உடனடியாக நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க அரசாணை வெளியிட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கத்தி, பிளேடால் தாக்கிக் கொண்ட ஷியா முஸ்லீம்கள்! – சென்னையில் பேரணி!