Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களை மாயவலையில் விழவைக்கும் சூதாட்ட செயலிகள்… தமிழக அரசுக்கு சீமான் வேண்டுகோள்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (15:14 IST)
ஆன்லைன் சூதாட்ட செயலிகளை தடை செய்ய வலுவான சட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ‘தமிழ்நாட்டில் மீண்டும் இணையவழி சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையையும் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்வோம் என்று அறிவித்த திமுக அரசு, இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது வன்மையான கண்டனத்திற்குரியது.

குறுக்குவழியில் அதிகப் பணம் ஈட்டுவதற்கான ஆசையைத் தூண்டி இளைஞர்களை மாய வலையில் விழவைக்கும் இணையவழிச் சூதாட்ட செயலிகள், தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள இளைய தலைமுறையினரின் எதிர்காலத்திற்குப் பேராபத்தாக மாறி நிற்கிறது. இணையவழி சூதாட்டங்களால் பொருள் இழப்பு, நேர இழப்பு மட்டுமின்றி வாழ்வின் முன்னேற்றத்திற்கான இலக்கிலிருந்து, இளைய தலைமுறையினரை மடைமாற்றுகிறதென்பதும் வலிமிகுந்த உண்மையாகும்.

மேலும், இளைஞர்களின் நற்சிந்தனையை முற்று முழுதாகச் சிதைப்பதோடு, தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன அழுத்தத்திற்கு ஆளாக்கி, அவர்களின் நல்வாழ்வினையே பாழ்படுத்திவிடுகிறது. இதனை உணர்ந்தே நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சமூகநல ஆர்வலர்களும் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று, இணையவழி சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க, கடந்த அதிமுக ஆட்சியின்போது அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இணையவழி சூதாட்ட கும்பல்கள் நீதிமன்றம் மூலம் தடை நீக்கம் பெற்றன. இருப்பினும் அடுத்த ஆறு மாதத்திற்குள் வலுவான சட்டம் இயற்றி, முறையாகத் தடைசெய்யுமாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசிற்கு, உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, தமிழ்நாட்டில் இணையவழி சூதாட்டத்தினால் ஏற்படும் உயிர்ப்பலிகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உயர்நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவும் விரைவில் முடிவடையக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இணையவழி சூதாட்டங்களை இதுவரை தடைசெய்யாது காலங்கடத்தி வரும் திமுக அரசின் மெத்தனப்போக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆகவே, மக்கள் நலத்தை கருத்திற்கொண்டு, இனியாவது இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்ய, வலுவான தடைச்சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என தெரிவித்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

தமிழக சட்டசபை கூடும் தேதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments