Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர் திருவிழா விபத்து: அரசு வேலை கோரும் சீமான்!

தேர் திருவிழா விபத்து: அரசு வேலை கோரும் சீமான்!
, புதன், 27 ஏப்ரல் 2022 (16:35 IST)
தேர் திருவிழாவின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் தொகையும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல். 

 
தஞ்சாவூர் அருகே, களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின் போது, உயர் அழுத்த மின்கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில், மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து, பேரதிர்ச்சியும் பெருந்துயருமடைந்தேன் என குறிப்பிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது, 
 
ஈடு செய்யவியலாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், துயரிருளில் மூழ்கியுள்ள களிமேடு கிராமத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இப்பெருந்துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அப்பகுதியில் போடப்பட்ட தார் சாலைதான் இத்தேர் விபத்துக்கான மூலக்காரணம் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. பழைய சாலையை அகற்றிவிட்டு, புதிய சாலையமைக்காமல், அதன் மேலேயே ஒன்றரை அடி உயரத்திற்கு, சாலை போட்டதால் பக்கவாட்டில் ஏற்பட்டப் பள்ளத்தின் விளைவாகவே, தேர் நிலை தடுமாறி, மின்விபத்து ஏற்பட்டு, உயிர்கள் பறிபோயிருக்கிறது. ஊழல், முறைகேடு அமைப்பு முறைகளால் எந்தளவுக்கு மக்களைப் பாதிக்கிறது; மக்களின் உயிருக்கு உலை வைக்கிறது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு கோரச்சாட்சியமாகும்.
 
தற்போது திருவிழாக்காலம் என்பதால், தமிழ்ப்பண்பாட்டின் முக்கிய அங்கமாக விளங்கும் கோயில் திருவிழாக்கள் தமிழகக்கிராமங்கள்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. நம்பிக்கையுடனும், உறவுகளின் ஒன்றுகூடல் மகிழ்ச்சியுடனும் பெருந்திரளாக மக்கள் திருவிழாக்களில் பங்கேற்கும் அதே வேளையில், எனதருமை உறவுகள் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் நிகழ்வுகளில் பங்கெடுக்க வேண்டுமெனவும், திருவிழாக்களைப் பாதுகாப்பாக நடத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். 
 
இரண்டாண்டு காலமாக, கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடுகளால் தடைப்பட்டிருந்த திருவிழாக்கள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெறுவதால் மக்கள் பெறும் உற்சாகத்துடன், பெருங்கூட்டமாக அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதால், தமிழ்நாடு அரசு மக்களின் பாதுகாப்பிற்கு எவ்விதத் தீங்கும் நேராதவாறு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனியாவது அரசு விழிப்படைந்து, சிற்றூர்கள் உட்பட திருவிழாக்கள் நடைபெறும் இடங்களில் போதியப்பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனக் கோருகிறேன்.
 
ஆகவே, களிமேடு கிராமத்தில் நடைபெற்ற இத்துயரச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்ச ரூபாயும், தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருபவர்களுக்கு 05 இலட்ச ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். இத்தோடு, அப்பகுதியில் தரமற்ற சாலையமைத்து உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்த அதிகாரிகள், ஒப்பந்ததார்கள் மீது கடும் சட்ட நடவடிக்கையைப் பாய்ச்ச வேண்டுமெனவும் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொலை வழக்கு: 4 பேர் கைது