Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசை கேள்விகளால் துளைத்த சீமான்: பதில் கிடைக்குமா?

அரசை கேள்விகளால் துளைத்த சீமான்: பதில் கிடைக்குமா?
, செவ்வாய், 30 ஜூன் 2020 (15:02 IST)
சாத்தான்குளம் படுகொலை தமிழக அரசுக்கு கேள்விகள் எழுப்பி சீமான் அறிக்கை. 

 
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது எதனால்?
 
இரு உயிர்களையும் ஒருசேர இழந்துவிட்டு ஜெயராஜின் குடும்பமே மொத்தமாய் நிலைகுலைந்து, நிராதரவற்று நிற்கிற நிலையிலும்கூட, இதேநிலை இன்னொரு குடும்பத்திற்கு வராமலிருக்க வேண்டும்; அதற்காகவாவது கொலையாளிகளைத் தண்டிக்க வேண்டுமெனும் அவர்களின் மிக நியாயமான கோரிக்கைக்கு செவிசாய்க்க தமிழக அரசு மறுப்பதேன்? அப்படியெனில், அவர்கள் சாகடிக்கப்பட்டதை நியாயப்படுத்த முயல்கிறதா தமிழக அரசு? அவர்கள் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் நிதியுதவியே இறந்துபோன இரு உயிர்களுக்கும் ஒப்பானதென்று எண்ணுகிறதா?
 
இருவரின் உடற்கூறாய்வு முடிந்து அதன் முடிவு வெளிவருவதற்குள்ளாகவே, அவர்கள் உடல்நலக்குறைவால் இறந்துபோனார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசரம் அவசரமாக அறிக்கை வெளியிட்டது எதற்காக? எதனடிப்படையில் அவர்கள் மரணம் குறித்த முடிவுக்கு முதல்வர் வந்தார்? உடற்கூறாய்வு அறிக்கைக்கு முன்பே, முந்திக்கொண்டு முதல்வர் வெளியிட்ட அறிக்கை வெளிப்படையாக நிகழ்ந்தேறும் அதிகார அத்துமீறல் இல்லையா?
 
‘பென்னிக்ஸ் தரையில் உருண்டு புரண்டததால்தான் உடலில் காயம் ஏற்பட்டது’ எனும் காவல்துறையினரின் பொய்யுரையையும் ஏற்ற தமிழக அரசு, மூன்று காவலர்களை பணியிடைநீக்கம் செய்தது ஏன்? உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினருக்கு 20 இலட்சம் நிதி அறிவித்தது ஏன்? ஏன் இந்த முரண்? உருண்டுபுரண்டதால் ஏற்பட்ட காயத்தினால் இறந்துபோனார்கள் என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற பச்சைத்துரோகச் செயல் இல்லையா?
 
‘கடை முன்பு கூட்டமாக நின்றார்கள்’, ‘வாக்குவாதம் செய்தார்கள்’, ‘தரையில் உருண்டு புரண்டதில் காயம்’, ‘வாகனத்தில் ஏறும்போது தவறி விழுந்ததில் காயம்’, ‘இருவரையும் ஒரே வாகனத்தில் அழைத்து சென்றனர்’ என்று காவல்துறை முதல் தகவல் அறிக்கையில் கூறியவை யாவும் பொய்யாக புனையப்பட்டவை எனத் தற்போது வெளியாகியிருக்கும் சி.சி.டி.வி. காணொளிக்காட்சியில் தெளிவாகியுள்ளது. நேரம் கடந்து வணிகம் செய்தார்களென்றால், அவ்விதி மீறலுக்காக அபராதம் விதித்திருக்கலாம் அல்லது கடையை மூடி சீல் வைத்திருக்கலாம். அதனையெல்லாம்‌ செய்யாது எதனடிப்படையில் கைதுசெய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றார்கள்? அவ்வாறு அழைத்துச் சென்றவர்களைப் பல மணிநேரம் வன்கொடுமை செய்து சாகடிக்க வேண்டியத் தேவையென்ன?
 
ஒருவரை குற்றஞ்சாட்டி கைது செய்கிறார்களென்றால், அவர்களை நீதிபதி முன் நிறுத்தி சிறைப்படுத்த வேண்டியதுதானே காவல்துறையின் வேலை, அதனைவிடுத்து, 31 வயது இளைஞர் ஒரே நாளில் உயிரைவிடுகிற அளவுக்குத் அடித்துத் துன்புறுத்த வேண்டிய அவசியமென்ன? ஒரு தவறும் செய்யாத அப்பாவிகளின் ஆசனவாயில் லத்தியைச் சொருகி மனிதவதை செய்து மிருகத்தனமாக காவல்துறையினர் நடந்துகொள்ள வேண்டிய நோக்கமென்ன? இதனை தமிழக அரசு ஏற்கிறதா?
 
இருவரும் சிறைப்படுத்தப்படுவதற்கு முன்பு அவர்களுக்குச் செய்யப்பட்ட உடற்பரிசோதனையில் இக்காயங்களை மருத்துவர் மறைத்து சான்றிதழ் அளித்தது ஏன்? அம்மருத்துவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? எவ்விதக் குற்றப்பின்னணியும் இல்லாதவர்களை, எவ்விதக் குற்றங்களிலும் ஈடுபடாது விதிமீறலுக்காகக் கைதுசெய்யப்பட்டவர்களை சொந்தப்பிணையில்விட நீதிபதி முனையாதது ஏன்? காவல்துறையின் கொடூரத் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களில் ரத்தம் வழிந்தநிலையில் இருந்த இருவரையும் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டது ஏன்? 
 
நேரில் பார்க்காமலே உத்தரவு வழங்கினாரா? எனில் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? சிறையிலடைக்கும் முன்னர், நடைபெற்ற உடல்பரிசோதனை குறித்த சிறை அறிக்கையில் இருவரின் பின்பகுதியிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது என்றும், கை-கால்களில் அடிபட்ட வீக்கம் இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு மோசமான உடல்நிலையிலிருந்த இருவரையும் சிறைத்துறை எவ்வாறு சிறையிலடைக்க அனுமதித்தது? சிறை அதிகாரியின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதற்குப் பின்புலத்தில் நடந்தேறிய அரசியலென்ன?
 
சாத்தான்குளம் அருகாமையிலேயே சிறைச்சாலையும், கிளைச்சிறையுமிருந்தும் 2 மணிநேரத்திற்கு மேலாகப் பயணம்செய்து தொலைதூரத்திலுள்ள கோவில்பட்டி கிளைச்சிறையிலடைத்தது ஏன்? எதற்காக? கோவில்பட்டி கிளைச்சிறையினருக்கும், சாத்தான்குளம் காவல்துறையினருக்குமான தொடர்பென்ன? முன்னாள் முதல்வரையே கைதுசெய்தாலும் அவர்களை காவல்துறையினரின் வாகனத்தில்தான் ஏற்றித்தான் சிறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனும் விதியிருக்கும்போது, ஜெயராஜ் தரப்பினரையே வாகனத்தைக் கொண்டு வரச்செய்து அதிலழைத்துக் கொண்டு செல்ல வேண்டியத் தேவையென்ன?
 
காவல்துறையினரிடம் தனது தரப்பு நியாயத்தைத் தெரிவித்தாலே, ‘காவல்துறையினரிடமே சட்டம் பேசுகிறாயா?’ என எளிய மக்களிடம் சீறுவதும், பழிவாங்கும் போக்கோடு பொய்வழக்குத் தொடுப்பதும், அலைக்கழித்து அதிகார அத்துமீறல் செய்வதுமான செயல்பாடுகளை நிறுத்துவதற்கு தமிழக அரசு முயலாதது ஏன்? சட்டம் பேசுவதே குற்றமா? இல்லை! காவல்துறையினர் சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களா? குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்படுபவர்களின் கைகளை காவல்துறையினரே உடைத்துவிட்டு, ‘கழிவறையில் தடுக்கி விழுந்தார்கள்’ என நீதிபதியிடத்திலேயே கட்டுக்கதையை அவிழ்த்துவிடும் கொடுஞ்செயலை தமிழக அரசு இதுவரை கண்டிக்காதது ஏன்? அதன் நீட்சிதானே சாத்தான்குளம் படுகொலை?
 
காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் கூறியவை யாவும் பொய்யென நிரூபணமாகியிருக்கும் நிலையில்கூட அக்காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யாது, வழக்கை மொத்தமாய் மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டியத் தேவையென்ன? தமிழக அரசுக்கே தமிழக அரசின் காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா? தனக்குக் கீழ் இருக்கும் காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிட்டாரா முதல்வர்?
 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – படுகொலை நிகழ்த்தப்பட்டு இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் அப்படுகொலை செய்தவர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? அப்படுகொலைக்கு காரணமான எவர் மீதும் எவ்வித வழக்கும் தொடுக்காதுவிட்டு அதனைக் காலம்கடத்தி, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கிடப்பில் போட்டது போல, அக்காவலர்கள் மீது எவ்வித வழக்கும் தொடுக்காது மத்திய புலனாய்வுத் துறைக்கு வழக்கை மாற்றிக் கிடப்பில் போட நினைக்கிறதா தமிழக அரசு?
 
சாத்தான்குளம் படுகொலை குறித்து காவல்நிலையத்திற்கு விசாரிக்கச்சென்ற நீதித்துறை நடுவரிடம் ஒருமையில் இழிவாக கடைநிலை காவலர் பேசினார் எனும் செய்தி பேரதிர்ச்சி தருகிறது. நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வழக்கில் நீதித்துறை நடுவரிடமே ஒரு காவலர் இவ்வளவு அதிகாரத்திமிரோடு பேசுகிறாரென்றால் யார் தந்த துணிவு இது? இதுதான் முதல்வர் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் காவல்துறை, மாண்புமிகு நீதித்துறையை‌ மதிக்கிற இலட்சணமா? முதல்வர் கட்டுப்பாட்டில் தான் காவல்துறை இருக்கிறதா?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் பரவும் புதிய வைரஸ்... மனிதர்களுக்குப் பரவுமா ?