Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின்சாரச் சட்டத்திருத்தம் - பாஜகவை சாடிய சீமான்!

மின்சாரச் சட்டத்திருத்தம் - பாஜகவை சாடிய சீமான்!
, வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:45 IST)
மாநில உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்தை பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தல்.


நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமார் பாஜக அரசை கடுமையாக சாடி அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மின்சாரச் சட்டத்திருத்த வரைவு – 2022ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வது இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினுடைய எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். மாநில உரிமைகளைப் பறித்து, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கின்ற மோடி அரசின் தொடர் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

விடுதலை பெற்றது முதல் கடந்த 50 ஆண்டுகளில் நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு மெல்ல மெல்ல செய்த மாநிலங்களின் அதிகாரப்பறிப்பை, 8 ஆண்டு கால மோடி தலைமையிலான பாஜக அரசு மிக வேகமாகச் செய்து வருகின்றது. மாநிலங்களிடம் இருந்த மின்சாரம் மீதான உரிமைகளை 2003 ஆம் ஆண்டு அன்றைய பாஜக – திமுக கூட்டணி அரசு ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பிடம் அளித்தது.

இது வழக்கம்போல மாநில உரிமை பறிப்புக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்த திமுகவின் பச்சைத் துரோகங்களின் மற்றுமொரு பக்கமேயாகும். தற்போது அந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரத்தைப் புதிய சட்டத்திருத்தம் மூலம் மோடி அரசு அதிகரிப்பதென்பது எஞ்சியுள்ள மின்சாரத்தின் மீதான மாநில அரசுகளின் உரிமைகளையும் பறிக்கும் செயலேயன்றி வேறில்லை.

இப்புதிய சட்டவரைவின்படி, ஒன்றிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடமே அனைத்து அதிகாரங்களும் இருக்கும். இனி, மின்சார ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் நினைத்தால் ஒரு மாநிலத்தில் எத்தனை தனியார் மின் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க முடியும். இதனால் சொந்தமாக மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்தைக் கொண்டிருக்கும் மாநிலங்களின் மின்வாரிய கட்டமைப்புகள் சேவை அடிப்படையில் செயல்படுவதால், அவைகளால் இலாப நோக்கில் செயல்படும் தனியார் மின் நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க இயலாமல் பேரிழப்பினைச் சந்தித்து எதிர்காலத்தில் மொத்தமாகத் தனியார் நிறுவனங்களிடமே விற்கும் நிலைக்குத் தள்ளப்படுவதோடு பல்லாயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்கள் வேலையிழக்கக் கூடிய பேராபத்தும் ஏற்படும்.

அதுமட்டுமின்றி மானியங்களை ரத்து செய்வதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ள இவ்வரைவானது, தனியார் மின்நிறுவனங்களுக்கு அதிகளவில் உரிமம் வழங்குவதன் மூலம், வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாக அந்நிறுவனங்கள் அனைவருக்கும் ஒரே அளவான மின் கட்டணம் வசூலிக்கும் என்பதால் தற்போது தமிழகத்தில் விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், பொதுமக்களுக்கு, தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் குறைந்த விலை மின்சாரம் உள்ளிட்ட அனைத்துவகை மின்சார மானியங்கள் அடியோடு நிறுத்தப்படவும் வழிவகுக்கும்.

இதன் மூலம் மின்சாரம் சேவை என்பதிலிருந்து மாறி வணிகம் என்ற அடிப்படையில் அதுவும் அதானி-அம்பானி உள்ளிட்ட தான் விரும்பிய தனியார் பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவைகளே கொள்முதல், விற்பனை, பகிர்மானம், விலைநிர்ணயம் அனைத்தையும் தீர்மானிக்கும் நிலை உருவாகும். இதன்மூலம் எரிபொருட்கள் போன்று மின்சாரத்தையும் இனி ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்ற மோடி அரசு நினைக்கிறது.

மின்மானியத்தைக் குறிப்பிட்ட நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாநில அரசே செலுத்திக் கொள்ளலாம் என்பது போன்ற இவ்வரைவில் உள்ள குளறுபடிகள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் வேளாண் பெருங்குடிமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். மேலும் வாடகை வீட்டில் வசிப்போர் தங்களது மின் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அவர்களுக்கான மானியமானது வீட்டு உரிமையாளரின் வங்கி கணக்கிற்கே செல்லும் என்பதால் நடுத்தர வர்க்க மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு இச்சட்டத்திருத்தம் ஆளாக்கிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மின்சார விநியோகத்தைத் தனியாருக்கு விடுவது, உற்பத்தி செலவுக்கு இணையாக மின்கட்டணத்தை உயர்த்துவது, மானியத்தைக் கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணத்தை நிர்ணயப்பது, மின்கட்டணத்தைத் தன்னிச்சையாக முடிவு செய்வது, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநிலத்தின் அரசினை கலந்தாலோசிக்காமலே மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது, என அனைத்தையும் ஒழுங்குமுறை ஆணையமே முடிவு செய்யும் என்பது போன்ற இவ்வரைவின் விதிகள் முழுக்க முழுக்க மின்சாரத் துறையில் மாநில அரசுகளின் அனைத்து உரிமைகளையும் பறிப்பதேயாகும்.

எனவே, மாநில அரசுகளின் உரிமையைப் பறித்துக் கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிகூத்தாக்கி, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் வகையிலான மின்சாரச் சட்டத்திருத்த வரைவு – 2022 ஐ இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கால்நடை கடத்தல் வழக்கு: முதல்வர் மம்தாவின் நெருங்கிய உதவியாளர் கைது!